Saturday, August 7, 2010

இஸ்லாம்

இஸ்லாத்தை தழுவிய யூத பெண்மணி
"ஷெய்க் ராஇத் ஸலாஹின் பணிவுதான் என்னை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது"
இஸ்லாத்தை தழுவிய யூத பெண்மணி தெரிவிப்பு

ஷெய்க் ராஇத் ஸலாஹ் இஸ்ரேலின் உள்ளிருந்து செயற்பட்டு வரும் `வடக்கு முஸ்லிம் இயக்கத்தின்' தலைவராவார். இவரின் பணிவு, பண்பாடு ஆகியவற்றைப் பார்த்து மொரோக்கோவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு யூதப் பெண் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

தாலீ பஹீமா என்ற யூத பெண் சமாதான செயற்பாட்டாளர் கடந்த ஜூன் 07 ம் திகதி இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் தனது பெயரை `நதா' என்று மாற்றிக் கொண்டுள்ள இவர் `அல் முஜ்தமஃ' சஞ்சிகைக்கு தான் இஸ்லாத்தைத் தழுவியமைக்கான காரணங்களை பின்வருமாறு கூறியிருந்தார்.

"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு பலர் காரணமாக இருந்தனர். கலாநிதி ராஇத் பத்ஹி, ஷெய்க் யூசுப் அல்பாஸ் ஆகியோர் எனக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை கற்றுத் தந்தனர். இருப்பினும் நான் இஸ்லாத்தை ஆழமாக ஆய்வு செய்து அதனைத் தழுவுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஷெய்க் ராஇத் ஸலாஹ்தான்."

`இஸ்லாத்தை நோக்கிய எனது பாதை புதியதல்ல. நான் நீண்ட காலமாக இஸ்லாத்தை ஆய்வு செய்து வந்தேன். ஆனாலும் இஸ்லாத்தில் நுழைவதற்கான கதவைத் திறந்து கொடுத்தவர் ஷெய்க் ராஇத் ஸலாஹ்தான். அவர் உயர்ந்த அந்தஸ்து உடையவராக இருந்தாலும் மிகவும் பணிவானவராக இருக்கிறார். அவரின் இந்தப் பணிவுக்கும் நடத்தைக்குமான காரணம் அல்குர்ஆன் தான் என்பதனை நான் புரிந்து கொண்டேன். அப்போதுதான் நான் இஸ்லாத்தை படிப் படியாக படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். சிறிது காலம் செல்கையில் கலாநிதி ராஇத் பத்ஹி அவர்களை சந்தித்தேன். அவர் எனக்கு இஸ்லாத்தின் போத னைகளையும் அடிப் படைகளையும் தெளிவாகச் சொல்லித் தந்தார். அதே போன்று நான் ஷெய்க் யூசுப் அல்பாஸ் அவர்களையும் சந்தித்தேன். எனக்கு அறபு மொழி தெரியாததனால் அல்குர்ஆனின் கருத்துக்களை எனக்காக மொழிபெயர்த்துத் தந்தார் அவர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே எனக்கு இஸ்லாத்தின்பால் நேர்வழி காட்டினான்."

"ஏன் இஸ்லாத்தைத் தழுவினீர்கள்" என்று அவரிடம் வினவப்பட்டபோது இப்படி பதிலளித்தார்:

"நாம் அனைவரும் சரியான பாதையைத் தேடி அதில்தான் பயணிக்க வேண்டும். நான் இஸ்லாத்தை அறிந்து கொண்டதன் பின் என் உள்ளத்தில் நான் சுமக்கின்ற தூது இதுதான் என்பதை உணர்ந்து கொண்டேன். இஸ்லாம் பூரணமானது. அதில் எந்தக் குறைகளும் இல்லை. எனவே தான் நான் இஸ்லாத் தைத் தழுவினேன். உலகில் மன நிம்மதியையும் மறுமையில் வெற்றியையும் தருகின்ற இஸ் லாத்தை எனக்குப் பின்பற்றக் கிடைத்தது பெரும் பாக்கியம்தான்."

மஸ்ஜிதுக்குள் நுழையும் போது நதா அழுதுவிட்டார். இது பற்றிக் கேட்ட போது, சிரித்துக் கொண்டே இப்படிச் சொன்னார்:

"எல்லா மஸ்ஜிதுகளிலும் நுழையும் போதும் நான் இப்படி அழுது விடுவதில்லை. என்றாலும் நான் அமைதியையும் உளத் திருப்தியையும் பெறுகின்றேன். எனவேதான் சிலபோதுகளில் நான் அழுது விடுவதனை நீங்கள் பார்க் கிறீர்கள். இது இயல்பானதே. ஏனெனில் அல்லாஹ்வின் இல்லத்தினுள் இருக்கும் போது படைப்பாள னான அவனின் மகத்துவத்தின் விசாலத்தை நான் உணர் கிறேன்."

முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து அவர் இப்படிச் சொன்னார்:

"இஸ்லாத்தை ஏற்க இருப்பவர்களுக்குச் சொல்ல முன்னர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நான் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். அதாவது, நீங்கள் இஸ்லாத்தின் வழியே பயணம் செய்யுங்கள். இஸ்லாத்தின் மகத்துவத்தை உணருங்கள். அடுத்தவர்களைப் பொறுத்த மட்டில், நாளாந்தம் பலர் இஸ்லாத்தைத் தழுவி வருவது நாம் தெரிந்த விஷயம்தான்."

தான் இஸ்லாத்தை தழுவியதை ஷெய்க் ராஇத் ஸலாஹ் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு குறித்து வினவிய போது இப்படிச் சொன்னார்:

"என்னோடு பேசாமலேயே எனக்கு இஸ்லாத்தைப் பரிசளித்த அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நான் ஆவலோடு இருந்தேன். எனவேதான் நான் இஸ்லாத்தைத் தழுவியதன் பின் அந்த சுப செய் தியை அவரிடம் சொல்வதற்காகச் சென்றேன்."

அவர் தொடர்ந்து கூறுகையில்:

" நான் இஸ்லாத்தைத் தழுவிய நொடியில் அடைந்த சந்தோ சத்தை விளக்கிச் சொல்வது கஷ்டமானது. இஸ்லாத்தைத் தழுவும்போது நான் அடைந்த சந்தோஷத்தை என் வார்த்தைகளால் சொல்லும் போது அது குறை மதிப்பீடு செய்ததாகவே அமைந்து விடும். என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் இஸ்லாத்தின் பால் எனக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்பதுதான்."

இஸ்லாத்தைத் தழுவியதன் பின் தன்னைப் பற்றிய யூத சமூகத்தின் பார்வை பற்றி இப்படிச் சொன்னார்:

"எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லை. எனது யூத நண்பர்கள் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்குத் தடையாக இருக்கவும் இல்லை. மாறாக, அவர்கள் எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். எந்தத் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற எனது தீர்மானத்தில் ஆரம்பம் தொட்டு நான் உறுதியாகவே இருக் கிறேன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது எனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான விஷயம்."

நதாவுடனான சந்திப்பின் இறுதியில் அவர் சொன்ன கருத்து "இஸ்லாத்தில் உண்மையான பணிவு இருக்கின்றது" என்பதுதான். மட்டுமன்றி இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரையே தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் நதா கருதுகிறார். இதற்கான காரணம் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் பெண்களை நீதமாக நடாத்துகிறார்கள் என்ற அவரது நிலைப்பாடேயாகும்.

அரபு மூலம்: முஸ்தபா ஸப்ரி
அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்


டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.


மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.


அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”


Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.


அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.


1) தாயின் அடிவயிறு (Abdominal wall)


2) கருப்பையின் சுவர் (Uterine wall)


3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் (Amniotic Membrane)
இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி” என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centuries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.” (Dr. Keith more)
“அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.
நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்..........

--
'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,

http://www.rawlathuljanna.tk/
நோன்பின் நோக்கமும், சிறப்பும்

உரை :அபூ முஹை


நோன்பின் நோக்கம் பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.”பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.
தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.
நோன்பின் சிறப்பு!
நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம் திர்மிதி.

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழு நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.
சுவர்க்கத்தில் ரய்யான் என்றொரு வாசல் உள்ளது, அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டுமே) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் பின் ஸாஃது (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

இரத்தம் குத்தி எடுத்தல்
ஆரம்பத்தில் ஜாஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு அனுமதியளித்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) நூல்: தாரகுத்னீ.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ”பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்.” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர், ஸாபித் அல் புன்னாணி நூல்: புகாரி.
(மருத்துவ சோதனைக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்)
கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள்.

ஷவ்வால் மாதத்தில் நோன்பு
யார் ரமளான் மாதத்தில் நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ”அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை
அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதத்தில் மூன்று நோன்புகள்
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

”நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.
மாதத்தில் மூன்று நோன்புகள் நோற்கும் மற்றொரு நபிவழி
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர். அறிவிக்கும் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.
ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.
நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ”ஆம்” என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
”உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது
உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத்தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாட்களில் நோன்பு இல்லை
நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

தொடர் நோன்பு கூடாது
”நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ”நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.


வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்
உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)
மேலே 2:185ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மூன்று முக்கிய அம்சங்களைக் கூறுகின்றது.

1. ரமழானின் சிறப்பு.

2. குர்ஆனின் சிறப்பு

3. நோன்பு எனும் மார்க்கக் கடமை, என்பனவே அவையாகும்.

ரமழானின் சிறப்பு:
ஒரு வருடம் 12 மாதங்களைக் கொண்டதாகும் இம் மாதங்களிற் சில மார்க்க ரீதியில் சிலாகித்து நோக்கப்படுகின்றது. அவற்றில் ரமழான் மாதம் பிரதானமானதாகும். இம்மாதம் தீய ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். இதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் செய்யப்படும் இபாதத்துக்கள் ஏனைய காலத்தில் செய்யப்படுவதை விடப் பன்மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தருகின்றன. பாவமன்னிப்புக்கான நீண்ட வாய்ப்பு இம்மாதத்தில் வழங்கப்படுகின்றது. தவறு செய்பவர்கள் திருந்தி தமது வாழ்க்கைத் திசையை நல்லவழி நோக்கித் திருப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் கொண்டுள்ளது. இம்மாதத்தின் சிறப்புக்களுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?

அல்குர்ஆன் அருளப்பட்டது:
ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது. அதுவே ரமழானின் அனைத்துச் சிறப்புக்களுக்கும் அடிப்படையாகும். அது அருளப்பட்ட மாதம் சிறப்பானது. அது அருளப்பட்ட நேரம் மகத்தானதாகும்.

“நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம். நிச்சயமாக (அதன்மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்” (44:03)

அந்த இரவு எவ்வளவு பாக்கியம் பெற்றது என்று கூறும்போது “1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்” என குர்ஆன் (பார்க்க – 97:1-3) கூறுகின்றது.

மேற்படி சூரா அல்குர்ஆன் அருளப்பட்ட இரவு 1000 இரவுகளை விட அருள் வளம் பொதிந்தது என்று கூறுகின்றது.

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்திற்கும், இரவுக்கும் ஏன் இத்தகைய பெருமை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனிதர்களுக்கான வழிகாட்டல்:
அது சாதாரண நூல் அல்ல. சர்வ லோகங்களின் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டது. அதனைச் சுமந்து வந்தவரும் சாதாரணமானவரல்ல. மலக்குகளின் தலைவரும், சக்தியும் நம்பிக்கை நாணயமுமுடைய ஜப்ரீல்(அலை) அவர்கள் அதனை சுமந்து வந்தார்கள். அதனைப் பெற்று மக்களுக்குப் போதித்து நடைமுறைப்படுத்தியவரும் சாதாரண மானவரல்ல. படைப்பினங்களில் சிறந்த, இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் அதனை மனித குலத்துக்குப் போதித்தார்கள். இவ்வகையில் அதன் ஏற்றம் மட்டிட முடியாததாகும்.

இந்த வேதம் ஏனைய வேதங்களைப் போன்று சுருங்கிய வட்டத்தைக் கொண்டதல்ல. இது வாழும் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது. ஏற்கனவே உள்ள வேத மொழிகள் செத்துவிட்டன. ஆனால், அரபு வாழும் மொழியாகும். இருப்பினும் இது அரபியர்களுக்குரிய வழிகாட்டியல்ல. அகிலத்தாருக்குரிய வழிகாட்டியாகும்.

ஏனைய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்கு, மூஸாவின் சமூகத்தாருக்கு, ஆதின் கூட்டத் தாருக்கு என்று இருக்கலாம். இது முஹம்மதின் சமூகத்திற்கு அருளப்பட்ட வேதம் இல்லை. முழு மனித சமூகத்திற்கும் அருளப்பட்ட வேதமாகும்.

அதேவேளை, முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்க்கை காலத்துடன் முடிவு பெறுவதும் அல்ல. அது உலகம் உள்ள அளவு வாழும் மனிதர்களுக்கான வழிகாட்டி வேதமாகும். இந்த வகையில் அல்குர்ஆனின் வருகை என்பது சாதாரண சமாச்சாரம் அல்ல.

வழிகாட்டலின் முக்கியத்துவம்:
வழிகாட்டல் என்பது மனிதனுக்குப் பிரதானமான அம்சமாகும். இன்று பல இலட்சியங்களுடன் வாழும் மக்கள் உள்ளனர். இலட்சியங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் இயல்பும் இவர்களிடம் இருக்கின்றது. ஆனால், சரியான இலட்சியத்திற்கும் அந்த இலட்சியத்தை அடைவதற்கான சரியான அணுகுமுறைக்குமான வழி காட்டல்தான் இல்லாமலுள்ளது.

வறுமையில் வாடுபவனுக்குப் பொருள் தேட வழிகாட்டல் தேவை. பொருள் தேடியவனுக்கு அதனை முதலீடு செய்யவும் செலவழிக்கவும் வழிகாட்டல் தேவை. கற்கும் ஆர்வமும் அயராத முயற்சியுமுள்ள மாணவனுக்கு எதை, எப்படி கற்பது என்ற வழிகாட்டல் தேவை. கற்பிப்பதற்கு, உண்பதற்கு, உறங்குவதற்கு அனைத்துக்குமே வழிகாட்டல் அவசியமானதாகும்.

இவ்வகையில் அல்குர்ஆன் வழிகாட்டலாக அதுவும் அகில உலக மக்கள், முஸ்லிம், காபிர் என அனைவருக்குமான வழிகாட்டலாகத் திகழ்கின்றது.

ஏனைய வேதங்கள் போன்று இது குறிப்பிட்ட காலத்திற்கோ, இடத்திற்கோ, இனத்திற்கோ, மொழியினருக்கோ சுருங்கியதாக இல்லாத, பிரபஞ்சம் தழுவியதாக உலக அழிவுவரை தொடரக் கூடியதான முழு மனித சமூகத்திற்குமுரியதாக இருப்பதால் இந்த வேதம் அருளப்பட்ட மாதம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இன்று மனித குலம் நல்ல வழிகாட்டல் இல்லாது துடுப்பு இழந்த படகு போல் தத்தளிக்கின்றது. அறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல திட்டங்களை முன்வைக்கின்றனர். ஆனால், அவை மனிதனை அதள பாதாளத்தை நோக்கித் தள்ளி விடுபவையாகத் திகழ்கின்றன.

பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக ஆண் – பெண் சரிநிகர் சமமாக ஒன்றுபோல் பேச, பழக இடமளிக்க வேண்டும் என்றனர். பாலியல் பலாத்காரத்தை நீக்க பெண்கள் மூடிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு திறந்த நிலைக்கு வரவேண்டும். அப்போது ஆண்கள் மத்தியில் இருக்கும் அறியும் ஆற்றல் குறைந்து பார்த்துப் பார்த்துப் பழகிப்பேய்விடும் என்றனர். இந்தக் கொள்கைளெல்லாம் ஐரோப்பிய உலகில் பாலியல் பலாத்காரத்தை வளர்க்கவே வகை செய்தது.

அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றனர். சீனாவில் வீட்டுக்கு ஒரு பிள்ளைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டன. இன்று சீனா பாரிய பெண்கள் பற்றாக்குறையையும் குடிமக்களிடம் தனித்து வாழ்ந்ததால் சகோதர பாசமோ குடும்ப பாசமோ அற்றுப்போய் குற்றச் செயல்களின் எண்ணிக்கை எகிறிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் நிம்மதியாக வாழ்வதற்கு அரசியல், ஒழுக்கவியல், பொருளியல், ஆன்மீகம் அனைத் துக்கும் நல்ல வழிகாட்டலை வேண்டி நின்கின்றது. அகில உலகம் நிம்மதியாக வாழத்தக்க வழிமுறையாக குர்ஆன் திகழ்கின்றது என்பது மகத்தான விடயமே. குர்ஆனுடன் சாதாரண பரிச்சயம் இருந்தாலே முட்டிவிட்டுக் குனியும் இந்த முட்டாள் தனமான போக்கிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.

யாருக்கு வழிகாட்டும்?:
அல்குர்ஆன் அனைத்து மக்களுக்குமான வழிகாட்டல்தான். காஃபிரான அரசு ஒன்று குர்ஆனின் சட்டப் பிரகாரம் ஆட்சி செய்தாலும் கூட அதன் பிரதிபலனான அமைதி, நீதி, நியாயம், அச்சமற்ற வாழ்வு போன்ற அருட்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் இது அனைவருக்குமான வழி காட்டல்தான். எனினும் அல்குர்ஆனிலிருந்து நேர்வழியைப் பெற்று சீர்வழியில் வாழும் பாக்கியம் கிடைக்க இறையச்ச சிந்தனை அவசியமாகும்.

“இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.” (அல்குர்ஆன் 02:02)

இங்கு பயபக்தியுடையோருக்கே இது நேர்வழியைக் காட்டும் என்று கூறப்படுகின்றது. இதனை முரண்பாடாக நாம் கொள்ளக் கூடாது. நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் நமது கண்ணிலும் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி இருக்க வேண்டும். நன்றாகப் பார்வை உள்ள ஒருவர் இருளில் உள்ள பொருளைப் பார்க்க முடியாது. ஏனெனில், அங்கு பொருளில் ஒளி இல்லை. கண்பார்வை இழந்தவர் வெளிச்சத்தில் உள்ளதையும் பார்க்க முடியாது. ஏனெனில், அவரது கண்ணில் ஒளி இருக்காது. கண் பார்வை இழந்தவருக்கு அது இருளாகத்தான் தெரியும். இது சூரியனின் குறைபாடல்ல.

அல்குர்ஆன் சூரியனைப் போன்று ஒளியுடன் திகழ்கின்றது. தக்வா எனும் இறை யச்சம் பார்வையற்றவருக்கு அது வழிகாட்டாது என்பது குர்ஆனின் குறைபாடல்ல. அதைப் பார்ப்போரின் குறைபாடாகும்.

ஆனால், ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை குர்ஆனை ஓதும்போதே தனக்கு நேர்வழி கிடைப்பதற்காக ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடி தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். ஹிதாயத்தை அல்லாஹ்விடம் வேண்ட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர் கூட சத்தியத்தைத் தேடும் நோக்கத்தில் குர்ஆனை அணுகினால் அவர் நிச்சயம் அதை அங்கே அடைந்துகொள்வார்.

தெளிவான சான்றுகள்:
இந்த மறை வசனம் தொடர்ந்து ரமழானைப் பற்றி கூறாமல் குர்ஆன் பற்றியே குறிப்பாகப் பேசுகின்றது. அதில் ரமழானில் அருளப்பட்ட அல் குர்ஆன் எனும் மனிதகுல வழிகாட்டி தெளிவான சான்றுகளைக் கொண்டது என்று வர்ணிக்கப்படுகின்றது.
குர்ஆன் வெறும் இறைவேதம் அல்ல. அது இறைவேதம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அதிலேயே தெளிவான சான்றுகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. 1500 வருடங்களுக்கு முன்னர் மனித கற்பனையில் கூட உதித்திருக்க முடியாத அறிவியல் உண்மைகளைக் குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது. தொள்பொருள் ஆய்வுகள் இன்று உறுதிப்படுத்தும் எத்தனையோ வரலாற்றுச் சான்றுகளை அது தருகின்றது. இவ்வகையில் அது தெளிவான சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது.

பிரித்தறிவிப்பது:
அடுத்து இந்த வேதம் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக் கூடியது. ஏனைய மதங்கள் போல் ஒரு கொள்கையை மட்டும் முன்வைத்துவிட்டு இது மௌனியாக இருக்காது. இறைவன் ஒருவன் என்று கூறுவதோடு ஈஸாவோ, வேறு இறைத் தூதர்களோ, மலக்குகளோ இறைமையைப் பெறமுடியாது என்று தெளிவாக அளந்து கூறும்.

நல்லோர்களின் அந்தஸ்த்தைக் கூறும் போதும் நடுநிலை தவறாது அவர்கள் மனித தன்மைக்கு மேல் உயர்த்தப்படமாட்டார். இவ்வாறு எல்லா வகையிலும் சத்தியமும் அசத்தியமும் அல்குர்ஆனால் தெளிவாகக் கூறுபோட்டுக் காட்டப்படும்.

இதனால்தான் படித்தவர்களெல்லாம் கல்லையும், மண்ணையும் வணங்கிக் கொண் டிருக்கும் போது சாதாரண ஒரு முஸ்லிம் கல்லைக் கல்லாகவும், மண்ணை மண்ணாகவும் பார்க்கின்றார். மண்ணால் செய்த சிலை எந்த சக்தி யையும் பெற்றிடாது; வழங்கிடாது என்று அதனைப் பிரித்து அறிந்து கொள்கின்றார். மாட்டை மாதா வாகப் பார்க்காது மாடாகப் பார்க்கின்றான். மனிதனை அவதாரமாகப் பார்க்காது மனிதப் பிறவியாகவே பார்க்கின்றான்.

நோன்பு பிடியுங்கள்:
இத்தகைய அருள் பொதிந்த அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை எவர் அடை கின்றாரோ அவர் அல்லாஹ் அருள்மறையை வழங்கியதற்கு நன்றி செலுத்து முகமாக அம்மாதம் முழுவதும் நோன்பிருக்கட்டும் என்று இம்மறை வசனம் கூறுகின்றது.

நோன்பு முடிந்ததும் நாம் பெருநாள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அந்நாளில் அல்லாஹ்வுக்காக தக்பீர் செய்து எமது மகிழ்ச் சியை வெளிப்படுத்துகின்றோம். இது கூட அல்குர்ஆன் அருளப்பட்டதற்கான நன்றிக்காகவே என்பதை அனேகர் அறிவதில்லை. இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில்,

“உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதையுமே (இதன் மூலம் அல்லாஹ் நாடுகின்றான்)” (2:185)

எனவே, ரமழான் என்றாலும் நோன்பு என்றாலும் அல்குர்ஆனின் மகத்துவத்தை உணர்த்துபவை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு அல்குர்ஆனுக்கு உரிய உயரிய அந்தஸ்தினை வழங்க முன்வர வேண்டும்.

நோன்பு தக்வாவுக்கான வழி:
நோன்பு ஏன் நோற்கப்பட வேண்டும் என்பதுபற்றித் திருமறை கூறும்போது,

“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183)

என்று கூறுகின்றது. நோன்பின் நோக்கம் இறையச்சமே என்று மேற்படி வசனம் கூறுகின்றது.

நோன்பு என்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் குறித்த நேரம் உணவையும், பானத்தையும் உடலுறவையும் தவிர்த்து வைத்து அல்லாஹ் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். உணவையும் தவிர்ப்பேன், உடல் உறவையும் தவிர்ப்பேன் என்று உறுதியெடுக்கும் பயிற்சியே நோன்பாகும்.

இந்தப் பயிற்சி அல்லாஹ் ஏவியவைகளை எடுத்து நடக்கவும் தடுத்தவைகளைத் தவிர்த்துக் கொள்வதற்குமான பக்குவத்தை வளர்க்கும்.

பொறுமையை, நல்ல பண்பாட்டை வீணான காரியங்களில் ஈடுபடாத பக்குவத்தை நோன்பு வழங்க வேண்டும் என்பது நோன்பின் எதிர்பார்ப்பாகும்.

நோன்பும் குர்ஆனும்:
ஹதீஸ்கள் நோன்பையும், குர்ஆனையும் பல கட்டங்களில் இனைத்துப் பேசுகின்றன. நோன்பும் குர்ஆனும் மறுமையில் அவற்றைப் பேணிய அடியார்களுக்காகப் பரிந்து பேசும் என ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் தான் நோன்பும் கடமையாக்கப் பட்டுள்ளது.

இதேவேளை, ஆரம்பத்தில் அல்குர்ஆன் தக்வாவுடையவருக்குத்தான் நேர்வழியாக அமையும் என்பதை அவதானித்தோம். இங்கே நோன்பு, தக்வா உணர்வு ஏற்படுவதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம்.

நோன்பின் நோக்கத்தைச் சரியாக அடையக்கூடிய வகையில் கட்டுப்பாடாக நோன்பு நோற்கப்பட்டால் அவர் தக்வாவைப் பெறலாம். தக்வாவைப் பெற்றால் அல்குர்ஆன் அவருக்கு நேர்வழியைக் காட்டும். அந்த நேர்வழியை அல்லாஹ் வழங்கியதற்காகத்தான் பெருநாளில் தக்பீர் கூறுகின்றோம்.

சிந்திக்க வேண்டியது:
சிலர் நோன்பு காலத்தில் குர்ஆனை ஓதுவர். அத்துடன் அதை மூடிவைத்து விடுவர். தக்வாவுடையவருக்கு குர்ஆன் நேர்வழி காட்டும் என்றால் அவர் அதில் நேர்வழியைத் தேட வேண்டும். குர்ஆனை ஓதாமல் அது என்ன கூறுகின்றது என்பதை அறியவோ, ஆராயவோ முயலாமல் அல்லது அறிந்தவர் கூறுவதைக் கேட்காமல் இருந்துவிட்டு குர்ஆன் நேர்வழி காட்டும் எனக் கருதமுடியாது. எனவே, தக்வாவுடைய உணர்வுடன் சத்தியத் தாகத்துடன் அல்குர்ஆனை உங்கள் கரங்களில் ஏந்துங்கள். உள்ளங்களில் ஒளியைப் பெறுவீர்கள்.

No comments:

Post a Comment